Tuesday, December 18, 2012

ஒலிவாங்கி


மேடைகளில் நாயகன்
சில வேளைகளில்,
மிதமான
பாதகன் !

விதவிதமாய்
வார்த்தைகள்
ருசிக்கும்
வாயழகி...
விடிய விடிய
வெட்டியாய்
முழங்கிடினும்
வெறுக்காமல்
விழித்திருக்கும்
மோகினி !

சொற்களால்
சூழப்பட்டிருக்கும்
உன் வாசல்.
செய்திகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்
வரவேற்பறை.
வாதங்களால்
வளைந்திருக்கும்
உன் பின் கதவு.
கனல் தெறிக்கும்
சமையலறை
காதல் சொட்டும்
பள்ளியறை
முன் அறை, பின் அறை
என,
ஒரு நடுத்தர இல்லத்தின்
முப்பரிமாணம்போல்
நீ!
 
உரைப்பவரின்
ஒலியினை நீ
ஒழுங்காக
வாங்கவில்லையென
உன் கழுத்தை,
இடம் வலமாய்...
இழுப்பார்...
மேல் கீழாய்
முறிப்பார்...
வரம்பின்றி
வளைப்பார்...
அத்தனையும் பொறுப்பாய்...
ஒரு ஞானியைப்போல்
இருப்பாய்!

எதிரே இருப்பவரின்
முகம் பார்த்து
பேச்சாளர்
பேசுகின்றார்...
அவர் பேச்சின்
இருதயமாய்
எதிரே நீ
இருகுரலாய்
பலம் சேர்ப்பாய் !

காலம் காலமாய்
மேடை மேடையாய்
பல கைகள்...
ப‌ன்மொழிக‌ள்...
வெகுமுகங்கள்...
ஜனத்திரள்கள்...
ஓயா உரைகள்...
என,

ஒலிவாங்கி...

நீ
ஒரு நாளில்
சபையேறி
எம் முகம் பார்த்து
த‌னியாளாய்
உரையாற்றும்
மொழி கேட்க‌
காத்திருப்பேன்...
முன் வ‌ரிசை
அம‌ர்ந்திருப்பேன் !

‍‍                                            நெப்போலிய‌ன்

No comments: