வாய்திறந்தான்
வாய்திறந்தான் நல்ல பேச்சாளர்.
திண்ணைப்பேச்சு,திருமணப்பேச்சு,
அரசியல்பேச்சு,ஆன்மீகப்பேச்சு,
இலக்கியப்பேச்சு,இரங்கல்பேச்சு, என
பேச்சுக்கொரு விலை !
பட்டு அங்கவஸ்திரம்,பைஜாமா குர்தா,
கோட்டு சூட்டு, வேட்டி சட்டை, என
விதவிதமாய் உடையணிந்து
மேடையில் வாய்ஜாலம்...
அன்பிற்குரிய பெரியோரே,
வளர்த்து ஆளாக்கிய தாய்க்குலமே,
என் இனிய தமிழ்மக்களே,
உடன் பிறப்பே,
அப்பனே ஐயனே வணக்கம்,
சகோதர சகோதரிகளே,
லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்,
என பலவாறாய் விளித்து...
பருப்பு தலைப்பு என்றால்
செருப்பை சிறப்பாய் கூறுவார் ?
பூசணிக்காயை பேச வந்தவர்
பால்கோவாவின் கதையளப்பார் ?
அலைகடல் வெள்ளமென கூட்டம்,
விரல்விட்டு எண்ணிவிடும் கூட்டம்,
அடிக்க ஆசிட்டும் முட்டையும்
அள்ளி வந்த கூட்டம்,என
பல கூட்டம் கண்டவர்...
பேருந்து, புகைவண்டி,
மிதிவண்டி, மாட்டுவண்டி,
விமானம், கருவாட்டு லாரி,
கார், ஆட்டோ, என
பேச்சிற்காகவே
நாள் முழுவதும் பயணிப்பார்...
நாளொரு ஊர்
ஊருக்கொரு உணவென
இரவும் பகலும் பேசியே கரைவார்...
துண்டு, சால்வை,கிரீடம்,
மலர்மாலை, முறுக்குமாலை, நோட்டுமாலை,
கேடயம், பொற்கிழி, பணமுடிப்பு, என
இதர மேடை வரும்படிகளும்
நிறைய... நிறைய...
வாய்திறந்தான்
ஒருநாள்
மேடையிலேயே இறந்துபோனார் !
அன்று அவர்
பேச இருந்த தலைப்பு
மெளனம்.
நெப்போலியன்