Tuesday, December 18, 2012

ஆடு புலி ஆட்ட‌ம்

 
க‌ரைக‌ள‌ற்ற‌ ந‌திப்ப‌டுகைக்கு அடித்து வ‌ர‌ப்ப‌ட்டான் ஒருவ‌ன். வ‌ண்ண‌ங்க‌ள‌ற்ற‌
வான‌வில் காண்பிப்ப‌தாய் சொல்லி பிர‌ச‌ங்க‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்தான்... எங்கிருந்தோ ப‌ற‌ந்து வந்த‌ ராட்ச‌ச‌க் க‌ழுகொன்று த‌ன் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ளால்
கிழித்துக் க‌வ்வியிருந்த‌ ர‌த்த‌ம் தோய்ந்த‌ வெள்ளாட்டுக் குட்டியைத் துற‌வியின் குடில் வாச‌லில் வீசி விட்டுப் ப‌ற‌ந்த‌து. விடியும்முன் வாச‌லுக்கு வ‌ந்த துற‌வியின் சேவ‌கி வெள்ளாட்டுக்குட்டி க‌ண்டு வீறிட்டாள்... நித்திரை க‌லைந்து பாத‌ர‌ட்சையின்றி வெளியே வ‌ந்த‌வ‌ன், ஆட்டுக்குட்டியையும் அல‌றி விழுந்திருந்த‌ அழ‌கு சேவ‌கியையும் அள்ளியெடுத்துக்கொண்டு குடிலுக்குள் நுழைந்தான். இன்றைய‌ அருளுரையில் குரு சொன்ன‌ வெள்ளாட்டுக்குட்டிக் க‌தையை ப‌ய‌ப‌க்தியுட‌ன் செவிம‌டுத்துக்கொண்டிருந்த‌ன‌ர், ஆற்றில் அடித்து வ‌ர‌ப்ப‌டாத‌ சீட‌ர்க‌ளும்...  ச‌ர‌ணாக‌தி ஜ‌ன‌ங்க‌ளும்... அருகில் அம‌ர்ந்திருந்தாள்
ர‌த்த‌ம் தோய்ந்த‌ நினைவுக‌ளுட‌ன்... சேவ‌கி !
                                                 
                                                                                                                நெப்போலிய‌ன்

ஒலிவாங்கி


மேடைகளில் நாயகன்
சில வேளைகளில்,
மிதமான
பாதகன் !

விதவிதமாய்
வார்த்தைகள்
ருசிக்கும்
வாயழகி...
விடிய விடிய
வெட்டியாய்
முழங்கிடினும்
வெறுக்காமல்
விழித்திருக்கும்
மோகினி !

சொற்களால்
சூழப்பட்டிருக்கும்
உன் வாசல்.
செய்திகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்
வரவேற்பறை.
வாதங்களால்
வளைந்திருக்கும்
உன் பின் கதவு.
கனல் தெறிக்கும்
சமையலறை
காதல் சொட்டும்
பள்ளியறை
முன் அறை, பின் அறை
என,
ஒரு நடுத்தர இல்லத்தின்
முப்பரிமாணம்போல்
நீ!
 
உரைப்பவரின்
ஒலியினை நீ
ஒழுங்காக
வாங்கவில்லையென
உன் கழுத்தை,
இடம் வலமாய்...
இழுப்பார்...
மேல் கீழாய்
முறிப்பார்...
வரம்பின்றி
வளைப்பார்...
அத்தனையும் பொறுப்பாய்...
ஒரு ஞானியைப்போல்
இருப்பாய்!

எதிரே இருப்பவரின்
முகம் பார்த்து
பேச்சாளர்
பேசுகின்றார்...
அவர் பேச்சின்
இருதயமாய்
எதிரே நீ
இருகுரலாய்
பலம் சேர்ப்பாய் !

காலம் காலமாய்
மேடை மேடையாய்
பல கைகள்...
ப‌ன்மொழிக‌ள்...
வெகுமுகங்கள்...
ஜனத்திரள்கள்...
ஓயா உரைகள்...
என,

ஒலிவாங்கி...

நீ
ஒரு நாளில்
சபையேறி
எம் முகம் பார்த்து
த‌னியாளாய்
உரையாற்றும்
மொழி கேட்க‌
காத்திருப்பேன்...
முன் வ‌ரிசை
அம‌ர்ந்திருப்பேன் !

‍‍                                            நெப்போலிய‌ன்

நறுக் ...

சிறைக்குள் நிலா
ஜ‌ன்ன‌ல் வ‌ழி வான‌ம்.


ச‌மாதான‌க் கொடியேந்தி ஊர்வ‌ல‌ம்
அரிசி சும‌ந்த‌ எறும்புக‌ள்.



இசைக்குறிப்புக‌ள் ஏதுமில்லா சிம்பொனி
குயில்.
                        

பொம்மையின் கையில் பொம்மை
குழ‌ந்தை.


பூட்டுக்குள் மாட்டிய‌ சாவி
திருட‌ன்.
                                       

வ‌ளைக்குள் எகிறும் பந்து
எலி.
             

பொட்டிட்ட‌ புகைப்ப‌ட‌த்திலும் சிரிக்கா‌ தாத்தா
ஆத்திர‌மாய் வெற்றிலை இடிக்கும் அப்ப‌த்தா.


குள‌க்க‌ரை அர‌ச‌ம‌ர‌ம்
நிறைமாத‌ம்.


மீன்க‌ள் மாட்டிய‌ முக‌ம்
அவ‌ள்.
        

ஓட்டைக்குடை
வான‌ம் கிழித்த‌ ம‌ழை.

                                                              நெப்போலியன்