Friday, May 27, 2011

அவசர நகரத்தின் அடிமனத் துடிப்புகள்... NC16



கதை கவிதைகளைத் தாண்டி எப்படி படைப்பிலக்கியம் கட்டுரை செய்திச் ச‌ம்பவங்கள் சார்ந்த தொகுப்புகளாய் நகரத் தொடங்கியதோ அவ்வாறே தொலைக்காட்சி, கதைகள் சார்ந்த ஒரு முனையிலிருந்து சம்பவங்கள் சமூக அலசல்கள் அது தொடர்பான வினை எதிர்வினைகள் உள்ளடங்கிய  நாடகத் தள வர்ணனை நிகழ்ச்சிகளாய் உலகமெங்கும் நேயர்களின் ஆர்வத் தொடர்களாய் வலம் வரத் தொடங்கியுள்ளது.

வாழும் நிலம், அங்கு அதன் மனித மனம், அவை சந்திக்கும் உணர்வுகள் ததும்பும் அகப்புற தர்க்கங்கள், தீர்வுகள், விடை அறியாப் பாதைகள், தொடரும்  உள்மன வன்மங்கள் என நீளும் அதன் நெளித்திசைகளில் இளமை முதுமை என மனித மனக் கீறல்களின் காயங்கள் உலர்த்தப்படலாம் இல்லை  உணர்த்தப்படலாம் எப்படியும், தொலைக்காட்சி நேயனின் குவிஆடியாய் இது போன்ற தொடர்களின் மின்பிம்பங்கள் வெறும் விழிச்செவிச்சுவையாய்  மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தின் அந்தரங்கக் கண்ணாடியாய் நம்மை நமக்கே பிரதிபலிக்கும் நியாயாதிபதிகளாய் நம் முன் எப்பொழுதும் கேள்விகளோடு நிற்கின்றன... இது போன்ற கேள்விகளே அடுத்து என்ன ? எனும் உளவியல் ரீதியான பதில்களை நம்முன் அடுக்கியபடியே நம்முள் நிரந்தரமாய் சுழல ஆரம்பித்து விடுகின்றன. இப்படி நம்மை ஒரு நீள்வட்டப்பாதையில் கடந்த சில வாரங்களாய் தொடரோடு ஒன்றி சுழல விட்டதுதான்... NC16

சிங்க‌ப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் NC16ன் ஒவ்வொரு தொடரிலும் வாலிபக் குருத்துகளின் கோபம், காமம், புலம்பல்,போதை, காதல், விடலைஅறியாமை, ரத்தம் என வண்ணத்துப் பூச்சிகள் மலர்களில் அமர்ந்த பொழுதுகளில் இழந்த இறக்கைகளின் இயல்பான நிற உதிர்தல்களும், முரட்டுக் கைகளுக்குள் சிக்கிக்கொண்ட பட்டாம் பூச்சிகளின் இறக்கைகளில் அழிக்கப்பட்ட சாயங்களின் சோக உதிரல்களும்... ஒரு ஈரானியப் படங்களுக்குரிய அடர்த்தியுடன் காட்சிமொழியாய் படமாக்கப் ப‌ட்டிருப்பதே NC16ன் வெற்றி. இப்படி எழுதிக் கொண்டிருக்கும் என் எழுத்துமொழியின் இந்த சிறிய அடர்த்திக்கும் NC16 எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஒரு காரணமே.

பொதுவாகவே டாக்கு ட்ராமா வகைத் தொடர்களை அவ்வளவு எளிதாக பார்வையாளனுக்குள் பதியவைக்கமுடியாது அதற்கு குறைந்த பட்சம் அல்லது அதிகபட்சம் 9/11 பாரன்ஹீட் படைப்புகள் போன்ற ஆளுமையும் விவரணங்களும் வேண்டும். நடிப்பவர்கள், நடு நிலை எதிர்வினை தொனிப்போடு நிகழ்வு சார்ந்த விமர்சகர்கள் அல்லது களம் சார்ந்த சிறப்பாளர்கள், பட்டியல் செய்திக் குறிப்புகள் போன்ற பெரும் புலிவால் வேலைகளைச் சார்ந்தது. புலிவால் என்ற சொல்லாடலின் காரணம்... கதை, சங்கதி, பேண்டஷி போன்ற விசயங்கள் போல் அல்லாது தான் வாழும் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை கற்பனை கலவாது இயல்பாய் கொடுப்பது, இதில் கற்பனையும் அவ்வளவு அதிகம் கை கொடுக்காது என்பதுதான் புலிவால் இருப்பினும், NC16 தைரியமாய் சிங்க‌ப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் பிடித்த போலித்தனமில்லாத புலிவால்.

மனிதமனத்தின் இருள் நிறைந்த பிரதேசங்களின் காட்சிக்குறியீடாய், வாலிப உணர்வுகளின்  அடிமனத் துடிப்புகளின் அதிர்வுகளாய், தவறின் பாதைக்குள் இயல்பாய் பயணிக்கும் யதார்த்த உள்ளங்களின் பரிதாபக் கோடுகளாய், பயமறியா கொக்கிக்குள் வாலிபம் புழுவாய்... என
NC16 ன்திரை முகங்கள் புதியவர்கள்... புதியவர்களா இவர்கள் என சந்தேகிக்கும் வகையில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள்... வழக்கமாய் வசந்தம் தொலைக்காட்சியில் வரும் முகங்கள் இவர்கள் இல்லை... புதியவர்களின் முகவரி NC16. அளப்பரையற்ற நடிப்பால் அதிரவைத்துள்ளனர்.

காட்சிகளுக்கும் சம்பவம் சார்ந்த களத்திற்கேற்றபடி NC16ல் டெலிபோட்டோகிராபியின் நிறம் ஒரு குறியீட்டு அணிகலனாய் தொடர்முழுவதும் வருவது அருமை. நேர்த்தியான எடிட் வெட்டால் காட்சியின் வினை எதிர்வினை சம்பவ அலசல் சம்பந்தப்பட்ட நடுநிலை சிறப்பாளரின் இன்டர்கட் பேச்சு மறுபடியும் தொடரும் காட்சி என எடிட்வெட் நேர்த்தி. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்கு தொடரில் இருந்த ஆளுமைபோன்றே பேட்டியாளர்களின் பங்களிப்பும் சமரச எடையாய் நிரம்பியிருந்தது தொடரின் பாரபட்சமின்மை தகுதியை உறுதி செய்கின்றது.

ஒரு அவசர நகரத்தின் அடிமனத் துடிப்புகளை இயல்பாய் சொல்லிய NC16ம்அதன் ஒட்டுமொத்தக் குழுவும் இந்த அவசர உலகில் நாம் நின்று கவனிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை நம்மை நிறுத்தி கவனிக்க வைப்பவர்கள் !

6 comments:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

வாழ்த்துகள் நண்பர் தொடர்ந்து எழுதுங்கள்.

Ma Anbalagan said...

Avasara... after reading yours...I want to see N C 16. That much I think that will be interesting in all respects. Thank you thambi. - ma. Anbalagan

நெப்போலிய‌ன் said...

ந‌ன்றி

iNbAh said...

I didn't watch NC16 so far, but your write-up tempts to watch it.

Thanks for the valuable feedback and keep the good work.

நெப்போலிய‌ன் said...

Thanks...

இராம. வயிரவன் said...

நெப்ஸ்...கலக்கலா எழுதுரீங்க! வாழ்த்துக்கள். என் கண்ணிலும் NC16 பட்டுது. 'அட...இது புதுசா இருக்கேன்னு...' புருவம் உயர்த்த வைத்தது. - வயிரவன்