தமிழ் சினிமாவின் முகம் மாற ஆரம்பித்திருப்பதின் அழகுதான் அழகர்சாமியின் குதிரை ! இலக்கியமும் சினிமாவும் சரியாக ஒன்று சேரும்போது நிகழும் அற்புதம்தான் அழகர்சாமியின் குதிரைக்கும் ஏற்பட்டுள்ளது. பாஸ்கர் சக்தி என்ற நேர்த்தியான கதாசிரியனின் சிறுகதை ( நீண்ட பெருஞ்சிறுகதை ) சிறந்த சினிமாவாக விரிந்துள்ளது.புதுமைப்பித்தனின் சிற்றன்னை சிறுகதை உதிரிப்பூக்கள் திரைப்படமாகவும், தமிழ்ச்செல்வனின் வெயிலோடுபோய் சிறுகதை பூ சினிமாவாகவும் மலர்ந்ததைப் போலவே மற்றுமொரு தரமான முயற்சி, பாராட்டுகள் என இயக்குனர் சுசீந்திரனை வெறுமனே முதுகு தட்டிக் கொடுக்க முடியாது... காரணம், பாரதிராஜா பதினாறு வயதினிலேயில் அழகான கமலஹாசனைத்தான் சப்பாணியாக்கி கோவணம் கட்டி விட்டார். பாலா பிதாமகனில் அம்சமான விக்ரமைத்தான் அகோரனாய் காட்டினார். இப்படியாய் கதாநாயக கெளரவத்துடன் கதாபாத்திரத்திற்காய் தங்களை உருமாற்றிக் கொண்டவர்களின் தைரியத்தை விட ஒரு நிஜ மனுஷனை கதைக்கேற்ற குதிரைக்காரனாய் களம் இறக்கியிருக்கும் நேர்மையும் நெஞ்சுரமும் வலிமை.
யார் இந்த அப்புக்குட்டி ? அழகர்சாமியாய் ! பரட்டை விரித்த தலையும்,சரிந்த பெரும் தொந்தியும்,அவிழ்ந்து விழும் கைலியும்,கோம்பை குரங்குணி மலைக் காட்டு வெகுளி மனிதன். அப்புக்குட்டி வரும் ஒவ்வொரு காட்சியும் நடிப்பிலக்கணத்திற்கான பாடம். ஒரு சில காட்சிகள் மட்டுமே வரும் கதை நாயகி சரண்யா மோகன் அப்புக்குட்டியின் மணப்பெண்ணாய் வாழ்ந்திருக்கிறார். ஒரு திருவிழாக் கிராமத்தில் கோயில் சாமி அழகரின் மரக்குதிரை காணாமல் போய்விட, வழிதவறிவரும் அழகர்சாமியின் நிஜக் குதிரையை சாமிக் குதிரை என கிராமம் சொந்தம் கொண்டாட, தன் ஒத்தை சொத்தான அந்த செல்லக் குதிரையை தேடிவரும் அப்புக்குட்டி அழகர்சாமியுடன் மல்லையாபுரம் கிராமமும் அதன் சூழலும் அங்கு சந்திக்கும் மனிதர்களும் அவர்களுக்கிடையேயான சம்பவங்களும் இயல்பாய் கோர்க்கப்பட்ட திரை ஓட்டத்தில் அழகர்சாமியின் குதிரை. நீண்ட இடைவெளிக்குப் பின் இளையராஜாவின் பின்னணி இசையில் சுகந்தம் , பாடல்களில் பரவசம்.யுகபாரதி, ப்ரான்சிஸ் கிருபா, சினேகன் மூவரின் பாடல்களும் முழுமை. அறிமுக ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கேமரா படத்தில் இன்னொரு நாயகன். வழக்கம்போல் சரியாக காசிவிஸ்வநாதனின் எடிட்டிங். அப்புக்குட்டிக்கும் கிராம ஆட்களுக்கும் இடையே நடைபெறும் சண்டைக்காட்சி தமிழ்சினிமாவின் மற்றுமொரு யதார்த்தமான சண்டைக்காட்சி. வலியத் திணிக்கப்பட்டிருக்கும் பரோட்டா சூரியின் , மலையாள மந்திரவாதியின் நகைச்சுவைக் காட்சிகள் தேவையற்றவை.
இந்த ஊருக்கு இனிமே மழையே வராதுடா என கொப்பளிக்கும் அழகன் தமிழ்மணியும், பொண்டாட்டி ஊறுகாய் போட வைத்திருந்த எலுமிச்சம் பழங்களை எடுத்து செய்வினை வைக்கும் ஊர் கோடங்கியும்,திருவிழாவை நடக்க விடாமல் வம்பு பண்ணும் எதிராளியும், மந்திரவாதியின் மண்டை ஓட்டு சோளிகளை ஆட்டயப்போட்டு குண்டு விளையாடும் அந்த குசும்புச் சிறுவனும், குதிரைக்குளம்பால் அங்கே மிதி வாங்கும் கிராமத்து மைனரும்,வெற்றுடம்புடன் வயிறு ஒட்டிய அந்த பரிதாபத் திருடனும்,பெரியகுளம் இன்ஸ்பெக்டரும் அவரிடம் குதிரை காணாப் போச்சு என புகார் கொடுக்க வரும் ஊர் பெரிசுகளும்,அத்வைதா பிரபாகரனின் இயல்பான கிராமத்து காதல் அலைகளும், மூட நம்பிக்கைகளைக் கலாய்த்தபடி ஊருக்குள் சுற்றிவரும் இளந்தாரிக் கூட்டமுமாய் அழகர்சாமியின் குதிரை இயல்பாய் கனைத்திருக்கிறது.
ஒரு நல்ல சினிமாவை அடையாளப்படுத்துவதும் அதைப் பார்த்து ரசிப்பதும் கலாரசிகனின் கடமையாயிருக்கிறது. வழக்கமான குப்பைகளிலிருந்து மாறுபட்டுவரும் இது போன்ற திரைப்படங்களைப் பார்ப்பதும், பார்த்து பரவசப்படுவதும் மட்டுமே உண்மையாய் உழைத்திருக்கும் அழகர்சாமியின் குதிரைக் குழுவின் வியர்வைக்கு நாம் தரும் உயர்ந்த விருது.
இரண்டு குதிரைகளுக்கிடையே பயணிக்கும் இயல்பான கதை ஓட்டம் அழகர்சாமியின் குதிரை. நம்பிச் செல்லும் ரசிகனை ஏமாற்றாத நல்ல தமிழ்த் திரைப்படம் அழகர்சாமியின் குதிரை.
6 comments:
படம் பார்க்கும் போது என் கிராமத்துக்கே போய் வந்தது போல் இருந்தது.சிறந்த இயக்கம்...சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள்...இவர் போல இளம் இயக்குநர்கள் தமிழ்த் திரைப்படங்களை வேறு தளத்துக்கு கொண்டு செல்வது கண்டு மகிழ்ச்சி.
அருமையான படம்.
Azhgarsamy....we should appriciate the director for selected such a hero. He had the strong confidance on his own story. This will reflect at the industry that the story only the BASE of a film.
- Ma. Anbalagan
நல்ல படம்... நல்ல விமர்சனம்!!!!
அனைவருக்கும் நன்றி...
இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும் - வயிரவன்
படம் பார்க்கவில்லை. ஆனால் படத்தைப் பற்றிய விமர்சனம் மிகவும் சுவையாக இருந்தது. நல்ல தரமான மொழிநடை. அழகான கருத்துக் கோவை. படிக்கச் சலிக்காத சொல்லாடல்கள்.
தொலைக்காட்சியில் படத்தின் விளம்பரம் பார்த்தபோது படம் பார்க்கப் பிடிக்கவில்லை. ஆனால் உங்களின் விமர்சனம் பிடித்திருந்தது.
வி.தேன்மொழி
Post a Comment