Sunday, May 12, 2013


தாய்
 
உயிர் கொடுத்தாய்
எனை வ‌ள‌ர்த்தாய்
நித‌ம் நினைத்தாய்
என் நிழ‌ல் ர‌சித்தாய்
அம்மா... என் அம்மா...
 
க‌ருவ‌றையில்
இட‌ம் அளித்தாய்
என் கை பிடித்து
ந‌டை வ‌குத்தாய்
அம்மா... என் அம்மா...

வ‌ள‌ர்ந்து வ‌ரும் வேளையிலே
வ‌ர‌ங்க‌ளையே வ‌ழ‌ங்கி வந்தாய்
வ‌ள‌ர்ந்த‌ பின்பும் வாழ்க்கையிலே
வ‌ச‌ந்த‌த்தையே வ‌ர‌வ‌ழைத்தாய்
அம்மா... என் அம்மா...

என் காய‌ங்க‌ளின் வேத‌னையில்
மூலிகையாய் நீ இருந்தாய்
நான் முன்னேறும் வேளைக‌ளில்
பின்புல‌மாய் நீ அமைந்தாய்
அம்மா... என் அம்மா...

பட‌ப‌ட‌க்கும் சூழ‌லிலே
சோர்வ‌க‌ற்றி சாந்தம் செய்தாய்
ப‌ண்ப‌ட்ட ம‌னித‌னாய் நான்
ப‌திந்திட‌வே பாதை நெய்தாய்
அம்மா... என் அம்மா...

க‌டைசிவ‌ரை உன் அருகே
நானிருப்பேன்
அம்மா... என் அம்மா...

உன் கால‌டியில்
மோட்ச‌ம் க‌ண்டேன்
நான் வில‌கேன்
அம்மா... என் அம்மா...

                                                                                                                      நெப்போலிய‌ன்

Tuesday, December 18, 2012

ஆடு புலி ஆட்ட‌ம்

 
க‌ரைக‌ள‌ற்ற‌ ந‌திப்ப‌டுகைக்கு அடித்து வ‌ர‌ப்ப‌ட்டான் ஒருவ‌ன். வ‌ண்ண‌ங்க‌ள‌ற்ற‌
வான‌வில் காண்பிப்ப‌தாய் சொல்லி பிர‌ச‌ங்க‌ம் செய்ய‌ ஆர‌ம்பித்தான்... எங்கிருந்தோ ப‌ற‌ந்து வந்த‌ ராட்ச‌ச‌க் க‌ழுகொன்று த‌ன் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ளால்
கிழித்துக் க‌வ்வியிருந்த‌ ர‌த்த‌ம் தோய்ந்த‌ வெள்ளாட்டுக் குட்டியைத் துற‌வியின் குடில் வாச‌லில் வீசி விட்டுப் ப‌ற‌ந்த‌து. விடியும்முன் வாச‌லுக்கு வ‌ந்த துற‌வியின் சேவ‌கி வெள்ளாட்டுக்குட்டி க‌ண்டு வீறிட்டாள்... நித்திரை க‌லைந்து பாத‌ர‌ட்சையின்றி வெளியே வ‌ந்த‌வ‌ன், ஆட்டுக்குட்டியையும் அல‌றி விழுந்திருந்த‌ அழ‌கு சேவ‌கியையும் அள்ளியெடுத்துக்கொண்டு குடிலுக்குள் நுழைந்தான். இன்றைய‌ அருளுரையில் குரு சொன்ன‌ வெள்ளாட்டுக்குட்டிக் க‌தையை ப‌ய‌ப‌க்தியுட‌ன் செவிம‌டுத்துக்கொண்டிருந்த‌ன‌ர், ஆற்றில் அடித்து வ‌ர‌ப்ப‌டாத‌ சீட‌ர்க‌ளும்...  ச‌ர‌ணாக‌தி ஜ‌ன‌ங்க‌ளும்... அருகில் அம‌ர்ந்திருந்தாள்
ர‌த்த‌ம் தோய்ந்த‌ நினைவுக‌ளுட‌ன்... சேவ‌கி !
                                                 
                                                                                                                நெப்போலிய‌ன்

ஒலிவாங்கி


மேடைகளில் நாயகன்
சில வேளைகளில்,
மிதமான
பாதகன் !

விதவிதமாய்
வார்த்தைகள்
ருசிக்கும்
வாயழகி...
விடிய விடிய
வெட்டியாய்
முழங்கிடினும்
வெறுக்காமல்
விழித்திருக்கும்
மோகினி !

சொற்களால்
சூழப்பட்டிருக்கும்
உன் வாசல்.
செய்திகளால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்
வரவேற்பறை.
வாதங்களால்
வளைந்திருக்கும்
உன் பின் கதவு.
கனல் தெறிக்கும்
சமையலறை
காதல் சொட்டும்
பள்ளியறை
முன் அறை, பின் அறை
என,
ஒரு நடுத்தர இல்லத்தின்
முப்பரிமாணம்போல்
நீ!
 
உரைப்பவரின்
ஒலியினை நீ
ஒழுங்காக
வாங்கவில்லையென
உன் கழுத்தை,
இடம் வலமாய்...
இழுப்பார்...
மேல் கீழாய்
முறிப்பார்...
வரம்பின்றி
வளைப்பார்...
அத்தனையும் பொறுப்பாய்...
ஒரு ஞானியைப்போல்
இருப்பாய்!

எதிரே இருப்பவரின்
முகம் பார்த்து
பேச்சாளர்
பேசுகின்றார்...
அவர் பேச்சின்
இருதயமாய்
எதிரே நீ
இருகுரலாய்
பலம் சேர்ப்பாய் !

காலம் காலமாய்
மேடை மேடையாய்
பல கைகள்...
ப‌ன்மொழிக‌ள்...
வெகுமுகங்கள்...
ஜனத்திரள்கள்...
ஓயா உரைகள்...
என,

ஒலிவாங்கி...

நீ
ஒரு நாளில்
சபையேறி
எம் முகம் பார்த்து
த‌னியாளாய்
உரையாற்றும்
மொழி கேட்க‌
காத்திருப்பேன்...
முன் வ‌ரிசை
அம‌ர்ந்திருப்பேன் !

‍‍                                            நெப்போலிய‌ன்

நறுக் ...

சிறைக்குள் நிலா
ஜ‌ன்ன‌ல் வ‌ழி வான‌ம்.


ச‌மாதான‌க் கொடியேந்தி ஊர்வ‌ல‌ம்
அரிசி சும‌ந்த‌ எறும்புக‌ள்.



இசைக்குறிப்புக‌ள் ஏதுமில்லா சிம்பொனி
குயில்.
                        

பொம்மையின் கையில் பொம்மை
குழ‌ந்தை.


பூட்டுக்குள் மாட்டிய‌ சாவி
திருட‌ன்.
                                       

வ‌ளைக்குள் எகிறும் பந்து
எலி.
             

பொட்டிட்ட‌ புகைப்ப‌ட‌த்திலும் சிரிக்கா‌ தாத்தா
ஆத்திர‌மாய் வெற்றிலை இடிக்கும் அப்ப‌த்தா.


குள‌க்க‌ரை அர‌ச‌ம‌ர‌ம்
நிறைமாத‌ம்.


மீன்க‌ள் மாட்டிய‌ முக‌ம்
அவ‌ள்.
        

ஓட்டைக்குடை
வான‌ம் கிழித்த‌ ம‌ழை.

                                                              நெப்போலியன்
 

Thursday, July 28, 2011

வாய்திற‌ந்தான்



வாய்திறந்தான்

வாய்திறந்தான் நல்லபேச்சாளர்.

திண்ணைப்பேச்சு,திருமப்பேச்சு,
அரசியல்பேச்சு,ஆன்மீகப்பேச்சு,
இலக்கியப்பேச்சு,இரங்கல்பேச்சு, என
பேச்சுக்கொரு விலை !

ட்டு அங்கஸ்திரம்,பைஜாமா குர்தா,
கோட்டு சூட்டு, வேட்டி ட்டை, என
விதவிதமாய் உடையணிந்து
மேடையில் வாய்ஜாலம்...

அன்பிற்குரியபெரியோரே,
ர்த்து ஆளாக்கியதாய்க்குலமே,
என் இனியமிழ்மக்களே,
உடன் பிறப்பே,
அப்பனே ஐயனே வக்கம்,
சகோத கோதரிகளே,
லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்,
எனவாறாய் விளித்து...
ருப்பு லைப்பு என்றால்
செருப்பை சிறப்பாய் கூறுவார் ?
பூசணிக்காயை பேசந்தர்
பால்கோவாவின் தையப்பார் ?

அலைகல் வெள்ளமெனகூட்டம்,
விரல்விட்டு எண்ணிவிடும் கூட்டம்,
அடிக்கஆசிட்டும் முட்டையும்
அள்ளி ந்தகூட்டம்,என
கூட்டம் ண்டர்...
பேருந்து, புகைவண்டி,
மிதிவண்டி, மாட்டுவண்டி,
விமானம், ருவாட்டு லாரி,
கார், ஆட்டோ, என
பேச்சிற்காகவே
நாள் முழுவதும் ணிப்பார்...

நாளொரு ஊர்
ஊருக்கொரு உணவென
இரவும் லும் பேசியே ரைவார்...
துண்டு, சால்வை,கிரீடம்,
ர்மாலை, முறுக்குமாலை, நோட்டுமாலை,
கேடம், பொற்கிழி, முடிப்பு, என
இதமேடை ரும்படிகளும்
நிறைய‌... நிறைய‌...

வாய்திறந்தான்
ஒருநாள்
மேடையிலேயே இறந்துபோனார் !
அன்று அவர்
பேசஇருந்தலைப்பு
மெளம்.
                   
               நெப்போலியன்

Friday, May 27, 2011

அவசர நகரத்தின் அடிமனத் துடிப்புகள்... NC16



கதை கவிதைகளைத் தாண்டி எப்படி படைப்பிலக்கியம் கட்டுரை செய்திச் ச‌ம்பவங்கள் சார்ந்த தொகுப்புகளாய் நகரத் தொடங்கியதோ அவ்வாறே தொலைக்காட்சி, கதைகள் சார்ந்த ஒரு முனையிலிருந்து சம்பவங்கள் சமூக அலசல்கள் அது தொடர்பான வினை எதிர்வினைகள் உள்ளடங்கிய  நாடகத் தள வர்ணனை நிகழ்ச்சிகளாய் உலகமெங்கும் நேயர்களின் ஆர்வத் தொடர்களாய் வலம் வரத் தொடங்கியுள்ளது.

வாழும் நிலம், அங்கு அதன் மனித மனம், அவை சந்திக்கும் உணர்வுகள் ததும்பும் அகப்புற தர்க்கங்கள், தீர்வுகள், விடை அறியாப் பாதைகள், தொடரும்  உள்மன வன்மங்கள் என நீளும் அதன் நெளித்திசைகளில் இளமை முதுமை என மனித மனக் கீறல்களின் காயங்கள் உலர்த்தப்படலாம் இல்லை  உணர்த்தப்படலாம் எப்படியும், தொலைக்காட்சி நேயனின் குவிஆடியாய் இது போன்ற தொடர்களின் மின்பிம்பங்கள் வெறும் விழிச்செவிச்சுவையாய்  மட்டுமல்லாமல் ஒரு சமூகத்தின் அந்தரங்கக் கண்ணாடியாய் நம்மை நமக்கே பிரதிபலிக்கும் நியாயாதிபதிகளாய் நம் முன் எப்பொழுதும் கேள்விகளோடு நிற்கின்றன... இது போன்ற கேள்விகளே அடுத்து என்ன ? எனும் உளவியல் ரீதியான பதில்களை நம்முன் அடுக்கியபடியே நம்முள் நிரந்தரமாய் சுழல ஆரம்பித்து விடுகின்றன. இப்படி நம்மை ஒரு நீள்வட்டப்பாதையில் கடந்த சில வாரங்களாய் தொடரோடு ஒன்றி சுழல விட்டதுதான்... NC16

சிங்க‌ப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் NC16ன் ஒவ்வொரு தொடரிலும் வாலிபக் குருத்துகளின் கோபம், காமம், புலம்பல்,போதை, காதல், விடலைஅறியாமை, ரத்தம் என வண்ணத்துப் பூச்சிகள் மலர்களில் அமர்ந்த பொழுதுகளில் இழந்த இறக்கைகளின் இயல்பான நிற உதிர்தல்களும், முரட்டுக் கைகளுக்குள் சிக்கிக்கொண்ட பட்டாம் பூச்சிகளின் இறக்கைகளில் அழிக்கப்பட்ட சாயங்களின் சோக உதிரல்களும்... ஒரு ஈரானியப் படங்களுக்குரிய அடர்த்தியுடன் காட்சிமொழியாய் படமாக்கப் ப‌ட்டிருப்பதே NC16ன் வெற்றி. இப்படி எழுதிக் கொண்டிருக்கும் என் எழுத்துமொழியின் இந்த சிறிய அடர்த்திக்கும் NC16 எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகளும் ஒரு காரணமே.

பொதுவாகவே டாக்கு ட்ராமா வகைத் தொடர்களை அவ்வளவு எளிதாக பார்வையாளனுக்குள் பதியவைக்கமுடியாது அதற்கு குறைந்த பட்சம் அல்லது அதிகபட்சம் 9/11 பாரன்ஹீட் படைப்புகள் போன்ற ஆளுமையும் விவரணங்களும் வேண்டும். நடிப்பவர்கள், நடு நிலை எதிர்வினை தொனிப்போடு நிகழ்வு சார்ந்த விமர்சகர்கள் அல்லது களம் சார்ந்த சிறப்பாளர்கள், பட்டியல் செய்திக் குறிப்புகள் போன்ற பெரும் புலிவால் வேலைகளைச் சார்ந்தது. புலிவால் என்ற சொல்லாடலின் காரணம்... கதை, சங்கதி, பேண்டஷி போன்ற விசயங்கள் போல் அல்லாது தான் வாழும் சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை கற்பனை கலவாது இயல்பாய் கொடுப்பது, இதில் கற்பனையும் அவ்வளவு அதிகம் கை கொடுக்காது என்பதுதான் புலிவால் இருப்பினும், NC16 தைரியமாய் சிங்க‌ப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் பிடித்த போலித்தனமில்லாத புலிவால்.

மனிதமனத்தின் இருள் நிறைந்த பிரதேசங்களின் காட்சிக்குறியீடாய், வாலிப உணர்வுகளின்  அடிமனத் துடிப்புகளின் அதிர்வுகளாய், தவறின் பாதைக்குள் இயல்பாய் பயணிக்கும் யதார்த்த உள்ளங்களின் பரிதாபக் கோடுகளாய், பயமறியா கொக்கிக்குள் வாலிபம் புழுவாய்... என
NC16 ன்திரை முகங்கள் புதியவர்கள்... புதியவர்களா இவர்கள் என சந்தேகிக்கும் வகையில் சபாஷ் போட வைத்திருக்கிறார்கள்... வழக்கமாய் வசந்தம் தொலைக்காட்சியில் வரும் முகங்கள் இவர்கள் இல்லை... புதியவர்களின் முகவரி NC16. அளப்பரையற்ற நடிப்பால் அதிரவைத்துள்ளனர்.

காட்சிகளுக்கும் சம்பவம் சார்ந்த களத்திற்கேற்றபடி NC16ல் டெலிபோட்டோகிராபியின் நிறம் ஒரு குறியீட்டு அணிகலனாய் தொடர்முழுவதும் வருவது அருமை. நேர்த்தியான எடிட் வெட்டால் காட்சியின் வினை எதிர்வினை சம்பவ அலசல் சம்பந்தப்பட்ட நடுநிலை சிறப்பாளரின் இன்டர்கட் பேச்சு மறுபடியும் தொடரும் காட்சி என எடிட்வெட் நேர்த்தி. குறிப்பாக தேர்வு செய்யப்பட்ட நடிகர்களுக்கு தொடரில் இருந்த ஆளுமைபோன்றே பேட்டியாளர்களின் பங்களிப்பும் சமரச எடையாய் நிரம்பியிருந்தது தொடரின் பாரபட்சமின்மை தகுதியை உறுதி செய்கின்றது.

ஒரு அவசர நகரத்தின் அடிமனத் துடிப்புகளை இயல்பாய் சொல்லிய NC16ம்அதன் ஒட்டுமொத்தக் குழுவும் இந்த அவசர உலகில் நாம் நின்று கவனிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை நம்மை நிறுத்தி கவனிக்க வைப்பவர்கள் !

அழ‌க‌ர்சாமியின் குதிரை அற்புத‌ம்


த‌மிழ் சினிமாவின் முக‌ம் மாற‌ ஆர‌ம்பித்திருப்ப‌தின் அழ‌குதான் அழ‌க‌ர்சாமியின் குதிரை ! இல‌க்கிய‌மும் சினிமாவும் ச‌ரியாக‌ ஒன்று சேரும்போது நிக‌ழும் அற்புத‌ம்தான் அழ‌க‌ர்சாமியின் குதிரைக்கும் ஏற்ப‌ட்டுள்ள‌து. பாஸ்க‌ர் ச‌க்தி என்ற‌ நேர்த்தியான‌ க‌தாசிரிய‌னின் சிறுக‌தை ( நீண்ட பெருஞ்சிறுக‌தை ) சிற‌ந்த‌ சினிமாவாக‌ விரிந்துள்ள‌து.புதுமைப்பித்த‌னின் சிற்ற‌ன்னை சிறுக‌தை உதிரிப்பூக்க‌ள் திரைப்ப‌ட‌மாக‌வும், த‌மிழ்ச்செல்வ‌னின் வெயிலோடுபோய் சிறுக‌தை பூ சினிமாவாக‌வும் ம‌ல‌ர்ந்த‌தைப் போல‌வே ம‌ற்றுமொரு த‌ர‌மான‌ முய‌ற்சி, பாராட்டுக‌ள் என‌ இய‌க்குன‌ர் சுசீந்திர‌னை வெறும‌னே முதுகு த‌ட்டிக் கொடுக்க‌ முடியாது... கார‌ண‌ம், பார‌திராஜா ப‌தினாறு வ‌ய‌தினிலேயில் அழ‌கான‌ க‌ம‌ல‌ஹாச‌னைத்தான் ச‌ப்பாணியாக்கி கோவ‌ண‌ம் க‌ட்டி விட்டார். பாலா பிதாம‌க‌னில் அம்ச‌மான‌ விக்ர‌மைத்தான் அகோர‌னாய் காட்டினார். இப்ப‌டியாய் கதாநாய‌க‌ கெள‌ர‌வ‌த்துட‌ன் க‌தாபாத்திர‌த்திற்காய் த‌ங்க‌ளை உருமாற்றிக் கொண்ட‌வ‌ர்க‌ளின் தைரிய‌த்தை விட‌ ஒரு நிஜ‌ ம‌னுஷ‌னை க‌தைக்கேற்ற‌ குதிரைக்கார‌னாய் க‌ள‌ம் இற‌க்கியிருக்கும் நேர்மையும் நெஞ்சுர‌மும் வ‌லிமை.


யார் இந்த‌ அப்புக்குட்டி ? அழ‌க‌ர்சாமியாய் ! ப‌ர‌ட்டை விரித்த‌ த‌லையும்,ச‌ரிந்த‌ பெரும் தொந்தியும்,அவிழ்ந்து விழும் கைலியும்,கோம்பை குர‌ங்குணி ம‌லைக் காட்டு வெகுளி ம‌னித‌ன். அப்புக்குட்டி வ‌ரும் ஒவ்வொரு காட்சியும் ந‌டிப்பில‌க்க‌ண‌த்திற்கான‌ பாட‌ம். ஒரு சில‌ காட்சிக‌ள் ம‌ட்டுமே வ‌ரும் க‌தை நாய‌கி ச‌ர‌ண்யா மோக‌ன் அப்புக்குட்டியின் ம‌ண‌ப்பெண்ணாய் வாழ்ந்திருக்கிறார். ஒரு திருவிழாக் கிராம‌த்தில் கோயில் சாமி அழ‌க‌ரின் ம‌ர‌க்குதிரை காணாம‌ல் போய்விட‌, வ‌ழித‌வ‌றிவ‌ரும் அழ‌க‌ர்சாமியின் நிஜ‌க் குதிரையை சாமிக் குதிரை என‌ கிராம‌ம் சொந்த‌ம் கொண்டாட‌, த‌ன் ஒத்தை சொத்தான‌ அந்த‌ செல்ல‌க் குதிரையை தேடிவ‌ரும் அப்புக்குட்டி அழ‌க‌ர்சாமியுட‌ன் ம‌ல்லையாபுர‌ம் கிராம‌மும் அத‌ன் சூழ‌லும் அங்கு சந்திக்கும் ம‌னித‌ர்க‌ளும் அவ‌ர்க‌ளுக்கிடையேயான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளும் இய‌ல்பாய் கோர்க்க‌ப்ப‌ட்ட‌ திரை ஓட்ட‌த்தில் அழ‌க‌ர்சாமியின் குதிரை.  நீண்ட‌ இடைவெளிக்குப் பின் இளைய‌ராஜாவின் பின்ன‌ணி இசையில் சுகந்த‌ம் , பாட‌ல்க‌ளில் ப‌ர‌வ‌ச‌ம்.யுக‌பார‌தி, ப்ரான்சிஸ் கிருபா, சினேக‌ன் மூவ‌ரின் பாட‌ல்க‌ளும் முழுமை. அறிமுக‌ ஒளிப்ப‌திவாள‌ர் தேனி ஈஸ்வ‌ரின் கேம‌ரா ப‌ட‌த்தில் இன்னொரு நாய‌க‌ன். வ‌ழ‌க்க‌ம்போல் ச‌ரியாக‌ காசிவிஸ்வ‌நாத‌னின் எடிட்டிங். அப்புக்குட்டிக்கும் கிராம‌ ஆட்க‌ளுக்கும் இடையே ந‌டைபெறும் ச‌ண்டைக்காட்சி த‌மிழ்சினிமாவின் ம‌ற்றுமொரு ய‌தார்த்த‌மான‌ ச‌ண்டைக்காட்சி. வ‌லிய‌த் திணிக்க‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ரோட்டா சூரியின் , ம‌லையாள‌ ம‌ந்திர‌வாதியின் ந‌கைச்சுவைக் காட்சிக‌ள் தேவையற்ற‌வை.
இந்த‌ ஊருக்கு இனிமே ம‌ழையே வ‌ராதுடா என‌ கொப்ப‌ளிக்கும் அழ‌க‌ன் த‌மிழ்ம‌ணியும், பொண்டாட்டி ஊறுகாய் போட‌ வைத்திருந்த‌ எலுமிச்ச‌ம் ப‌ழ‌ங்க‌ளை எடுத்து செய்வினை வைக்கும் ஊர் கோட‌ங்கியும்,திருவிழாவை ந‌ட‌க்க‌ விடாம‌ல் வ‌ம்பு ப‌ண்ணும் எதிராளியும், ம‌ந்திர‌வாதியின் ம‌ண்டை ஓட்டு சோளிக‌ளை ஆட்டய‌ப்போட்டு குண்டு விளையாடும் அந்த‌ குசும்புச் சிறுவ‌னும், குதிரைக்குள‌ம்பால் அங்கே மிதி வாங்கும் கிராம‌த்து மைன‌ரும்,வெற்றுட‌ம்புட‌ன் வ‌யிறு ஒட்டிய‌ அந்த‌ ப‌ரிதாப‌த் திருட‌னும்,பெரிய‌குள‌ம் இன்ஸ்பெக்ட‌ரும் அவ‌ரிட‌ம் குதிரை காணாப் போச்சு என‌ புகார் கொடுக்க‌ வ‌ரும் ஊர் பெரிசுக‌ளும்,அத்வைதா பிர‌பாக‌ர‌னின் இய‌ல்பான‌ கிராம‌த்து காத‌ல் அலைக‌ளும், மூட‌ ந‌ம்பிக்கைக‌ளைக் க‌லாய்த்த‌ப‌டி ஊருக்குள் சுற்றிவ‌ரும் இள‌ந்தாரிக் கூட்ட‌முமாய் அழ‌க‌ர்சாமியின் குதிரை இய‌ல்பாய் க‌னைத்திருக்கிற‌து.

ஒரு நல்ல‌ சினிமாவை அடையாள‌ப்ப‌டுத்துவ‌தும் அதைப் பார்த்து ர‌சிப்ப‌தும் க‌லார‌சிக‌னின் க‌ட‌மையாயிருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மான‌ குப்பைக‌ளிலிருந்து மாறுப‌ட்டுவ‌ரும் இது போன்ற‌ திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்ப்ப‌தும், பார்த்து ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுவ‌தும் ம‌ட்டுமே உண்மையாய் உழைத்திருக்கும் அழ‌க‌ர்சாமியின் குதிரைக் குழுவின் விய‌ர்வைக்கு நாம் த‌ரும் உய‌ர்ந்த‌ விருது.

இர‌ண்டு குதிரைக‌ளுக்கிடையே ப‌ய‌ணிக்கும் இய‌ல்பான‌ க‌தை ஓட்ட‌ம் அழ‌க‌ர்சாமியின் குதிரை. ந‌ம்பிச் செல்லும் ர‌சிக‌னை ஏமாற்றாத‌ ந‌ல்ல‌ த‌மிழ்த் திரைப்ப‌ட‌ம் அழ‌க‌ர்சாமியின் குதிரை.